ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜர்

பவர் ஸ்டார் சீனிவாசன்.
பவர் ஸ்டார் சீனிவாசன்.
Updated on
1 min read

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தைச் சேர்ந்த முனியசாமி, இறால் பண்ணை மற்றும் உப்பளத் தொழில் செய்து வருகிறார். இவர் தனது தொழிலை மேம்படுத்த கடன் வாங்க முடிவு செய்து, தனக்கு தொிந்த ஒருவர் மூலம் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை தொடர்பு கொண்டுள்ளார்.

கடந்த 2019-ல் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், ரூ.15 கோடி கடன் பெற்றுத் தருவதாகவும், அதற்கு முதல் கட்டமாக கையாளும் கட்டணமாக ரூ.15 லட்சம் தரவேண்டும் எனவும் கேட்டுள்ளார். முனியசாமி ரூ.14 லட்சத்தை மட்டும் நடிகரின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். அதையடுத்து, கடன் பெற்றுத் தராமல் நடிகர் ஏமாற்றி வந்ததால், முனியசாமி கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். எனவே, 2020-ம் ஆண்டு நடிகர் பவர் ஸ்டார் ரூ.14 லட்சத்துக்கு காசோலை கொடுத்துள்ளார்.

அந்தக் காசோலையை வங்கியில் செலுத்திய போது, பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. பின்னர், முனியசாமி ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்-1 நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தொடர்ந்து ஆஜராகாததால், பிடியாணை பிறப்பித்து, நீதித்துறை நடுவர் மன்றம் உத்தரவிட்டது.

மேலும், கடந்த ஜனவரிக்குள் ஆஜர்படுத்த சென்னை அண்ணா நகர் போலீஸாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், நீதித்துறை நடுவர் எண் -1 நீதிமன்ற நடுவர் நிலவேஸ்வரன் முன்னிலையில் நேற்று ஆஜரானார். அதன் பின்னர், நீதித்துறை நடுவர் வரும் மார்ச் 20-ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in