

புதுச்சேரி: சிறுமி பாலியல் கொலை வழக்கில் சேகரிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் கைதான இருவரின் வாக்குமூலங்கள் அடங்கிய ஆவணங்கள் சீலிட்ட உறையில் போக்சோ நீதிமன்றத்தில் இன்று காவல் துறை அதிகாரியால் ஒப்படைக்கப்பட்டது.
புதுச்சேரி சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2-ம் தேதி மாயமானர். போலீஸார் வழக்கு பதிவு தேடினர். 5-ம் தேதி கழிவுநீர் வாய்க்காலில் கை கால்கள் கட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரிந்தது. அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக ஜிப்மர் அனுப்பப்பட்டது.
முத்தியால்பேட்டையைச் சேர்ந்த அரிக்கிருஷ்ணன் (எ) விவேகானந்தன் 57, காக்கா (எ) கருணாஸ் 19, ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
புதுச்சேரி முழுதும் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்கள் நடந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றம் அழைத்து வந்தால், பொதுமக்கள் தாக்க கூடும் என்பதால், சிறப்பு அனுமதி பெற்று காலாப்பட்டு மத்திய சிறையில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி அடைக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கு சீனியர் எஸ்.பி. கலைவாணன் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்தில் சேகரிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் சாட்சி ஆவணங்களும், பிரேத பரிசோதனையின்போது மருத்துவ பரிசோதனையில் கைப்பற்றப்பட்ட தடயங்கள், கைது செய்யப்பட்ட விவேகானந்தன், கருணாஸ் இருவரும் அளித்த வாக்குமூலம் அடங்கிய ஆவணங்கள் சீலிட்ட உறையில் வைத்து காவல் விசாரணை அதிகாரிகளால் புதுச்சேரி கிழக்கு எஸ்பி லட்சுமியிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
இவற்றை, முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் தலைமையிலான போலீஸார் இன்று மாலை, 2 அட்டை பெட்டிகளில் புதுச்சேரி போக்சோ வழக்குகளை விசாரிக்கும் விரைவு நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர். சாட்சி ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.