தூத்துக்குடியில் 4 மாத பெண் குழந்தை கடத்தல்: மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துணிகரம்

தூத்துக்குடியில் 4 மாத பெண் குழந்தை கடத்தல்: மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துணிகரம்
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் வந்து மர்ம நபர்கள், 4 மாத பெண் குழந்தையைக் கடத்திச் சென்றனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா(25). கணவர் கைவிட்டதால், தனது 4 மாத பெண் குழந்தையுடன் அண்மையில் தூத்துக்குடி வந்துள்ளார். தூத்துக்குடி வி.இ. சாலையில், அந்தோணியார் ஆலயம் அருகே சாலையோரம் தங்கி, யாசகம் பெற்று வாழ்கிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு சந்தியா தனது குழந்தையுடன் அந்தப் பகுதியில் தூங்கியுள்ளார். மறுநாள் காலை கண்விழித்துப் பார்த்தபோது, அருகே படுத்திருந்த குழந்தையை காணவில்லை. அதிர்ச்சியடைந்த சந்தியா, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி ஏஎஸ்பிகேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படை போலீஸார் அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள், குழந்தையை தூக்கிச் சென்ற காட்சி பதிவாகியுள்ளது.

ஏற்கெனவே தமிழகத்தின் பல பகுதிகளில் குழந்தை கடத்தல்தொடர்பாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என போலீஸார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தூத்துக்குடியில் குழந்தை கடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in