சென்னை | தொழிலாளி மீது முகமூடி அணிந்து தாக்குதல்: ரவுடி கைது

சென்னை | தொழிலாளி மீது முகமூடி அணிந்து தாக்குதல்: ரவுடி கைது

Published on

சென்னை: தொழிலாளி மீது முகமூடி அணிந்து வந்து தாக்குதல் நடத்தியதாக ரவுடி ஒருவரை ராயப்பேட்டை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை திருவல்லிக்கேணி நீலம் பாஷா தர்கா, டாக்டர் பெசன்ட் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஷாருக்கான் (21). இவர், திருவல்லிக்கேணி, ரோட்டரி நகர் 1வது தெருவில் உள்ள விஜய் என்பவரின் குதிரை லாயத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 8ம் தேதி அதிகாலை அவர் பணி செய்யும் குதிரை லாயத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு முகமூடி அணிந்து வந்த ஒருவர் ஷாருக்கான் மீது சரமாரியாக தாக்கி விட்டு தப்பினார். தகவல் அறிந்த ராயப்பேட்டை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்து காயமடைந்த ஷாருக்கானை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், தாக்குதல் நடத்தியதாக செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரவுடி ரமேஷ் (40) என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட ரமேஷுக்கும், ஷாருக்கானின் முதலாளி விஜய் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், விஜயிடம் யாரும் வேலை செய்ய கூடாது, மீறி வேலை செய்பவர்களை விரட்டவே இதுபோல ரமேஷ் தாக்குதல் நடத்தி உள்ளார். யார் தாக்குகிறார் என்பது தெரியாமல் இருக்கவே முகமூடி அணிந்துள்ளார். மேலும், ரவுடி பட்டியலிலும் ரமேஷ் உள்ளார் என போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in