

ஒரகடம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் தொழிற்பேட்டையில் செயல்படும் 50-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர்.
இங்கு இரவு பணி முடித்துவிட்டு செல்லும் தொழிலாளர்களை கத்திமுனையில் மிரட்டி மர்ம கும்பல் ஒன்று தொடர்ந்து செல்போன், பணம்,தங்கச் சங்கிலி போன்றவற்றை பறித்துசென்றதாக ஒரகடம் காவல் நிலையத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
அப்போது 2 பைக்களில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த 4பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி,சோதனை செய்ததில் கத்திமுனையில் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்தது இவர்கள்தான் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக செங்கல்பட்டு ஆப்பூர் பகுதியைச் சேர்ந்த மணி, பிரகாஷ், லாரன்ஸ், கண்ணன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களை அழைத்துச் செல்லும்போது தப்பிச் செல்ல முயன்ற 4பேருக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.