ரூ.5 லட்சம் போதை பொருள் அம்பத்தூரில் பறிமுதல்: 2 இளைஞர்கள் கைது

ரூ.5 லட்சம் போதை பொருள் அம்பத்தூரில் பறிமுதல்: 2 இளைஞர்கள் கைது
Updated on
1 min read

ஆவடி: சென்னை, அம்பத்தூரில் ரூ.5லட்சம் மதிப்பிலான ‘மெத்தாம்பேட்டமைன்’ என்ற போதைப் பொருளை நேற்று போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப் பொருட்கள் பதுக்கல்,விற்பனையை தடுக்கும் நடவடிக்கைகளில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அம்பத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேலய்யா பாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று அதிகாலை அம்பத்தூர், பானு நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, பானுநகர் புழல்ஏரிக்கரை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு காருக்கு அருகே சில இளைஞர்கள் வந்துசென்று கொண்டிருந்தனர். இதையடுத்து, தனிப்படை போலீஸார் சம்பந்தப்பட்ட கார் அருகே சென்றபோது, அங்கு நின்ற இளைஞர்கள் தப்பியோடினர். தொடர்ந்து, போலீஸார் அந்த காரை சோதனை செய்தபோது, காரில் ரூ.5 லட்சம்மதிப்பிலான 200 கிராம் ‘மெத்தாம்பேட்டமைன்’ என்ற போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.

பெங்களூருவில் இருந்து.. போலீஸார் காரில் இருந்த, அம்பத்தூர், பானு நகரை சேர்ந்த பாபு (25), வெங்கடாபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவ்விசாரணையில், பாபுவும், ரமேஷும், கர்நாடகா மாநிலம், பெங்களூரு சென்று, போதைப் பொருளை வாங்கி வந்து, அம்பத்தூர் பகுதியில் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த அம்பத்தூர் போலீஸார், பாபு, ரமேஷ் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து, ‘மெத்தாம்பேட்டமைன்’ போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in