

திருச்சி: இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சிக்கு நேற்றுமுன்தினம் ஸ்ரீலங்கன் விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தொடர்ந்து, பயணிகள் காத்திருப்பு அறை, குடியுரிமைப் பிரிவுஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது, பயணிகளுக்கான கழிப்பறையில் கிடந்தபையில் ரூ.1.03 கோடி மதிப்பிலான, 1.560 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, தங்கம் கடத்தி வந்த பயணி ஒருவர், சோதனைக்கு பயந்து, தங்கம் கடத்தி வந்த பையை கழிப்பறையில் போட்டுவிட்டுச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.