Published : 09 Mar 2024 06:30 AM
Last Updated : 09 Mar 2024 06:30 AM
சென்னை: பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு ஆவடியிலிருந்து சென்னை வந்த மாணவிகள் இருவர், தங்களை சிலர் கடத்திவிட்டதாகக் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆவடியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவர், நேற்று முன்தினம் பிராட்வே பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். திடீரென அவர்கள், தங்களை கடத்தல் கும்பல் கடத்தியதாகவும், தற்போது இங்கே விட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறி கதறி அழுதனர். இதைக் கண்டு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து பூக்கடை காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடம் விரைந்து மாணவிகளை மீட்டு அழைத்துச் சென்றனர்.
பெற்றோரிடம் ஒப்படைப்பு: பின்னர், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போதுதான் மாணவிகளை யாரும் கடத்தவில்லை என்பதும், அவர்கள் குடும்பத்தினரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுவெளியேறியதும் தெரியவந்தது. இதையடுத்து, மாணவிகளின் பெற்றோரை நேரில் வரவழைத்து 2 மாணவிகளையும் போலீஸார் அவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சிறுமிகள் இருவரும் ஆவடியில் உள்ளபள்ளி ஒன்றில் ஒரே வகுப்பில் படித்து வருகின்றனர். தோழிகளான இவர்களில் ஒருவரைகடந்த 6-ம் தேதி அவரது தாயாரும், சகோதரரும் திட்டிஉள்ளனர்.
இதையடுத்து, அந்த மாணவி வீட்டைவிட்டு வெளியேறினார். மேலும், தனது வகுப்பு தோழி ஒருவருடன் பள்ளிக்குச் செல்லாமல் தொடர்ந்து 2 நாட்கள் ரயிலில் சுற்றித் திரிந்துள்ளார்.
பின்னர், சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து பாரிமுனை பேருந்து நிலையம் சென்றுள்ளனர். மீண்டும் வீட்டுக்குச் சென்றால் பெற்றோர் அடிப்பார்கள் என்ற பயத்தில் மாணவிகள் இருவரும் கடத்தல் நாடகமாடியுள்ளனர்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT