Published : 09 Mar 2024 06:30 AM
Last Updated : 09 Mar 2024 06:30 AM

மக்களை மிரட்டி நூதன முறையில் பணம் பறிக்கும் கும்பல்: உஷாராக இருக்க சைபர் க்ரைம் போலீஸார் எச்சரிக்கை

சென்னை: தமிழக சைபர் க்ரைம் போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூரியரில் போதைப் பொருள் கடத்துவதாகக் கூறி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. இந்தமோசடியில் தனியார் கூரியர் அலுவலகத்திலிருந்து பேசுவதாக ஒரு மோசடி நபர்,ஒரு நபரின் செல்போனை தொடர்பு கொண்டு பேசுகிறார்.

அந்த மர்ம நபர், சம்பந்தப்பட்ட நபர் பெயரில் போதைப் பொருள் பார்சல் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு வந்திருப்பதாகவும், அந்த பார்சலை மும்பை போலீஸார் பறிமுதல் செய்திருப்பதாகவும் கூறி, மும்பை காவல் துறை அதிகாரியிடம் பேசுமாறு கூறி கான்பரன்சிங்கில் இணைக்கிறார்.

மும்பை காவல் துறை அதிகாரி எனப் பேசும் மற்றொரு மோசடி நபர், சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை என்ற பெயரில் மறைமுகமாக மிரட்டுகிறார்.

சம்பந்தப்பட்ட நபர், அந்த பார்சலை தான் அனுப்பவில்லை என்றும், தன்னுடைய ஆதார் அடையாள அட்டை உள்ளிட்டவை தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், அவரது வங்கிக் கணக்குகள் பண மோசடி வழக்குகளில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கிறார். அதை ஏற்பதாக, அந்த மோசடி மும்பை காவல் துறை அதிகாரி தெரிவிக்கிறார்.

அதேவேளையில் அந்த மோசடி நபர், சம்பந்தப்பட்ட நபரிடம் ரிசர்வ் வங்கி அதிகாரியைத் தொடர்பு கொண்டு அவரது வங்கி கணக்கை மோசடிக்கு பயன்படுத்தவில்லை என்பதைப் பார்க்க வேண்டும் என்றும், வங்கிக் கணக்கை புதுப்பித்துக் கொள்ளுமாறும் கூறுகிறார். மேலும் செல்போன் கான்பரன்சிங் இணைப்பில் ரிசர்வ் வங்கி அதிகாரி என மற்றொரு மோசடி நபரை சேர்த்துக் கொள்கிறார்.

ரிசர்வ் வங்கி அதிகாரி எனப் பேசும் அந்த நபர், பாதிக்கப்பட்ட நபரின் வங்கிக் கணக்கு விவரம், பணப்பரிமாற்ற விவரம் உள்ளிட்ட தகவல்களைக் கேட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவரின் கணக்குகளைப் பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளதா, என்பதை ரிசர்வ் வங்கி கண்டறிவதற்காக, சம்பந்தப்பட்ட நபர் பெரும் தொகையைக் குறிப்பிட்ட வங்கிக் கணக்கு மாற்றி பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.

இதை நம்பி அந்த நபர், அந்த வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்புகிறார். பணம் அந்த மோசடி நபரின் வங்கிக் கணக்கு சென்றதும், செல்போனில் அதுவரை தொடர்பு கொண்ட அனைத்துமோசடி நபர்களும் தங்களது இணைப்புகளைத் துண்டித்து, தங்களது செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்துவிடுகின்றனர்.

இந்த மோசடியில் பொதுமக்கள் சிக்காமல் இருக்க, கைப்பேசிக்கு திடீரென வரும் அறிமுகம் இல்லாத அழைப்புகளை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். சுய விவரங்களை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கேட்டால், அந்த நபர் அதிகாரப்பூர்வமாக வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுகிறாரா, அந்த நபர் அந்த நிறுவனத்தில் பணிபுரிகிறாரா என்பதை சரிபார்க்க வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x