

சென்னை: வாடகை தாய் மோசடி விவகாரத்தில் இளம் பெண் ஒருவர், பெங்களூருவைச் சேர்ந்த அவரது ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருமணமாகியும் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாதவர்கள் உரிய சட்ட வழிகாட்டுதல்களின்படி (வாடகை தாய் சட்டம்) வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், இதேபோல ஒரு தம்பதி சென்னை மாவட்ட மருத்துவ குழுவை அண்மையில் அணுகினர். அவர்கள் நேற்று முன்தினம் தேனாம்பேட்டையில் உள்ள சென்னை மாவட்ட மருத்துவ குழு முன்பாக வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதி வேண்டி ஆஜராகினர். வாடகை தாயாக திருவொற்றியூரைச் சேர்ந்த ராதிகா (26) என்பவர் ஆஜராகினார்.
அவருடன் அவரது கணவர் கோபிநாத் என்ற பெயரில் ஆதார்கார்டில் திருத்தம் செய்து மோசடியாக பெங்களூருவைச் சேர்ந்தகுணசேகரன் (40) என்பவர் ஆஜராகினார். இதை மருத்துவ குழுவினர் கண்டு பிடித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
போலீஸாரின் விசாரணையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான ராதிகா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 4 ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை பிரிந்து 2 ஆண்டுகளாக குணசேகரன் என்பவருடன் சேர்ந்து திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருவது தெரிந்தது.
மேலும், திருவொற்றியூரைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் ராதிகாவை அணுகி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொடுத்தால் ரூ.3 லட்சம் பணம் பெற்றுத் தருவதாக ஆசை காட்டி உள்ளார். அதற்காக குணசேகரனின் ஆதார் கார்டின் பெயரை மோசடியாக கோபிநாத்என தயார் செய்து மோசடியை அரங்கேற்றியது தெரியவந்தது. இதையடுத்து, ராதிகா, குணசேகரன் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.