

கும்பகோணம்: கும்பகோணத்தில் இளைஞரை கடத்தி, தாக்கியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி உட்பட 8 பேரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். கும்பகோணம் கர்ணக்கொல்லைத் தெருவைச் சேர்ந்தவர் சு.சுரேஷ்குமார்(30). கொத்தனார் வேலை செய்து வரும் இவர், தனது பெற்றோருடன், அவரது சகோதரி வீட்டில் வசித்து வருகிறார். இவரது தம்பி சுபாஷ் துபாயில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், மார்ச் 6-ம் தேதிபாலக்கரையைச் சேர்ந்த கி.சித்திரவேலு மற்றும் பாலாஜி நகரைச் சேர்ந்த முருகானந்தம் (என்கிற) ஏசி முருகன் மற்றும் சிலர் சுரேஷ்குமார், வீட்டுக்கு வந்து, அவரது தம்பி சுபாஷ் குறித்து கேட்டுள்ளனர். பின்னர், சுரேஷ்குமாரை காரில் கடத்திச் சென்று கும்பகோணம் சிங்காரப் பிள்ளைத் தோப்புக்குள் வைத்து பயங்கர ஆயுதங்களால் அவரைத் தாக்கியுள்ளனர்.
வலிதாங்க முடியாமல் சுரேஷ்குமார் கூச்சலிட்டதைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டதால், கடத்தலில் ஈடுபட்டவர்கள் சுரேஷ்குமாரை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடி விட்டனர்.
இதுதொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் சுரேஷ்குமாரை கடத்தியதாக கும்பகோணம்- சென்னை சாலை பாலாஜி நகரைச் சேர்ந்த சி.முருகன்(55), சாக்கோட்டையைச் சேர்ந்த செ. தினேஷ்(34),ராணிப்பேட்டை மேல்விசாரம் அப்துல் ஹக்கீம் சாலையைச் சேர்ந்த ந.சல்மான்(32), அவரது மாமியாரான நாகப்பட்டினம் யாகூசன் பள்ளித் தெருவைச் சேர்ந்த சேக்பாசித் மனைவி ரஹினாபேகம்(52),
அதே பகுதியைச் சேர்ந்த த.அபூல்ஹசன்(32), ஷா.மன்சூர்அலி (31), கும்பகோணம் மாத்திக்கேட்டைச் சேர்ந்த செ.மாணிக்கவாசகம்(33), பாலக்கரையைச் சேர்ந்த கி.சித்திரவேலு(46), அய்யப்பன் தெருவைச் சேர்ந்த மா.ராஜா(50) ஆகிய 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவான ரஹினாபேகத்தை தவிர, மற்ற 8 பேரை கைது செய்தனர். இதில், சல்மான் நாம் தமிழர் கட்சி பாசறைச் செயலாளராக உள்ளார்.
இதுதொடர்பாக போலீஸார் கூறியது: சுபாஷ் துபாயில் பணியாற்றிய இடத்தில் தவறு ஏற்பட்டதால், அங்கிருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு வந்து விட்டதாக தனது அண்ணன் சுரேஷ்குமாரிடம் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக, தன்னை தேடி வருபவர்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும் சுபாஷ் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், மார்ச் 6-ம் தேதி சுரேஷ்குமாரை கடத்திச் சென்ற ரஹினாபேகம் உட்பட 9 பேர், சுபாஷ்துபாயில் உள்ள பாசித் என்பவரிடமிருந்து வாங்கிக் கொண்டு வந்த 900 கிராம் தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை, எங்களிடம் தராமல் ஏமாற்றி விட்டார்.
அந்த தங்கம் மற்றும் பொருட்களை எங்களுக்குத் தர வேண்டும் என்று கூறியதுடன், சுபாஷ் இருக்கும் இடத்தைதெரிவிக்குமாறு கேட்டு, சுரேஷ்குமாரை ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் 8 பேரை கைது செய்துள்ளோம். தலைமறைவாகியுள்ள ரஹினாபேகத்தை தேடிவருகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.