

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் தொழிலாளியை கொலை செய்துவிட்டு அராஜகத்தில் ஈடுபட்ட ரவுடிகளை விரட்டி சென்ற போலீஸ்காரர் அரிவாளால் வெட்டப்பட்டதாகவும், அங்குள்ள தோட்டத்தில் பதுங்கிய ரவுடிகளை பிடிக்க முயன்றபோது அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது துப்பாக்கி சூடு நடத்தி ரவுடி ஒருவரை பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி (42), திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி வெங்கடேஷ் உள்ளிட்ட தொழிலாளர்கள் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குழி சுடலை கோயில் அருகே சாலை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குவந்த தென்திருபுவனத்தை சேர்ந்த ரவுடிகள் பேச்சித்துரை (23), சந்துரு (23) ஆகியோர் கருப்பசாமி, வெங்கடேஷ் ஆகியோரை அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது.
இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி உயிரிழந்தார். பின்னர் அந்த ரவுடிகள் அப்பகுதியில் வந்த காரை வழிமறித்து அரிவாளால் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் வந்த பேருந்தையும் வழிமறித்து ரகளை செய்ததுடன், கண்ணாடிகளையும் உடைத்துள்ளனர். ரவுடிகளின் இந்த அட்டகாசம் குறித்து கேள்விப்பட்டதும், வீரவநல்லூர் போலீஸார் அங்குவந்தனர்.
போலீஸாரை பார்த்ததும் ரவுடிகள் தப்பியோடினர். அவர்களை விரட்டி சென்றபோது வீரநல்லூர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் செந்தில்குமார் (35) என்பவரை ரவுடிகள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பின்னர் அந்த ரவுடிகள் அங்குள்ள தோட்டத்தில் புகுந்ததாகவும், அப்போது ரவுடிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தி பேச்சித்துரையை பிடித்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சந்துரு தப்பியோடிவிட்டார்.
இதனிடையே ரவுடிகள் அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த போலீஸ்காரர் செந்தில் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.