நாவலூர் | ஆடு வளர்ப்பு திட்டத்தில் முதலீடு: ரூ.1.5 கோடி மோசடி செய்த தம்பதி கைது

நாவலூர் | ஆடு வளர்ப்பு திட்டத்தில் முதலீடு: ரூ.1.5 கோடி மோசடி செய்த தம்பதி கைது
Updated on
1 min read

நாவலூர்: சென்னைப் புறநகர் பகுதியான நாவலூரில் இயங்கி வரும் அக்ரோடெக் என்ற தனியார் நிறுவனம், விவசாய நிலங்களில் ஆடுகளை வளர்த்து லாபம் ஈட்டிக்கொடுப்பதாகவும், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 4 முதல் 10 சதவீதம் வரை மாத வட்டி கொடுப்பதாகவும் விளம்பரம் செய்தது.

இதை நம்பி கடந்த 2019-ம் ஆண்டு சதாம்உசேன் (28) உள்ளிட்ட 27 பேர் அந்த நிறுவனத்தில் தனித்தனியாக ரூ.1 லட்சம் முதல் 10 லட்சம் வரை முதலீடு செய்தனர்.

முதல் 4 மாதங்களுக்கு மட்டும் வட்டியை சரியாக கொடுத்த அந்த நிறுவனம் பின்னர் திடீரென வட்டி கொடுப்பதை நிறுத்தியது. இதையடுத்து கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஊரடங்கு முடிந்து கடந்த 2022-ம் ஆண்டு முதலீட்டாளர்கள் அக்ரோ டெக் நிறுவனத்துக்கு சென்று பார்த்தபோது அந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. அவர்களின் அலைபேசி எண்களும் செயல்படவில்லை.இதையடுத்து தாம்பரம் காவல் ஆணையரகத்தில் முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர்.

ஆணையர் அமல்ராஜ் தனிப்படை ஒன்றை அமைத்தார். காவல் ஆய்வாளர்கள் குமார், கிருஷ்ணகுமார் தலைமையில் இந்தகுழுவினர் விசாரணை மேற்கொண்டு தாழம்பூர் பகுதியில்அடுக்குமாடி குடியிருப்பில் சொகுசு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த மாணிக்கம், அவரது மனைவி செல்வபிரியாவை கைது செய்தனர். அவர்களிடமிருந்து லேப்டாப், ஒரு வாகனம் ஆகியவற்றைக் கைப்பற்றினர். இருவரும் செங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in