

சென்னை: சென்னையில் உள்ள கோயில்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அதிகாலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த மிரட்டல் மின்னஞ்சலில், ‘சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் வெடித்து சிதறும்’ என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெங்களூரு போலீஸார், இதுகுறித்து தமிழக டிஜிபி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கிருந்து சென்னை போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள அனைத்து கோயில்களிலும் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். முக்கிய கோயில்கள் சிலவற்றில் சோதனை நடத்தினர்.
ஆனால், எந்த வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை. எனவே, புரளி மற்றும் வதந்தியை பரப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வெடி குண்டு மிரட்டல் வந்த இ-மெயிலின் ஐபி முகவரியை கண்டறியும் பணியில் பெங்களூரு மற்றும் சென்னை சைபர் க்ரைம் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை முழுவதும் நேற்று வாகன சோதனை தீவிரப்படுத்தப் பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.