

விசாகப்பட்டினம்: சமூக வலைதளத்தில் பிரபலமாகி, பின்னர் கன்னடம், தெலுங்கு என சிறிய பட்ஜெட் படங்களில் கதாநாயகியாகி ‘யுவர்ஸ் லவ்விங்லி, தி டிரிப் உட்பட சில படங்களில் நடித்து தெலுங்கு திரையுலகில் வலம் வருபவர் நடிகை சவும்யா ஷெட்டி. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த இவருக்கு, சில நாட்களுக்கு முன் அதே விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பிரசாத் என்பவரின் மகளுடன் நட்பு ஏற்பட்டது.
பிரசாத்தின் மகள் அழைத்ததால், சவும்யா ஷெட்டி அவரது வீட்டிற்கு சென்றார். இதனால் இவர்களின் நட்பும் வளர்ந்தது. சவும்யா ஷெட்டி அடிக்கடி இவரது வீட்டுக்கு வந்து போவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை பிரசாத்தும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன் மகளின் படுக்கை அறையில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் நகைகள் மாயமானதை கண்டு பிரசாத்தும் அவரது வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து விசாகப்பட்டினம் 4-வது போலீஸ் நிலையத்தில் பிரசாத் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து, யார், யாரெல்லாம் கடந்த சில நாட்களாக புதிதாக வந்து சென்றவர்கள் எனும் பட்டியலை தயார் செய்து ஒவ்வொருவராக விசாரித்து வந்தனர்.
இதில் நடிகை சவும்யா ஷெட்டி மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. அவர் எங்கு இருக்கிறார் என போலீஸார் தேடிய போது, அவர் கோவாவில் இருப்பது தெரியவந்தது.
கோவாவில் தலைமறைவு: விசாகப்பட்டினம் போலீஸார்கோவா சென்று அங்கு தலைமறைவாக இருந்த நடிகை சவும்யாவிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அவர்தான் பிரசாத்வீட்டில் 4 முறை நகைகளை திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
உல்லாசமாகவும் ஆடம்பரமாகவும் வாழ நகைகளை திருடியதாக சவும்யா ஷெட்டி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் விற்ற நகைகளை போலீஸார் மீட்டனர்.
மேலும், சவும்யாவை போலீஸார் கைது செய்து விசாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது இந்த சவும்யாஷெட்டி விசாகப்பட்டினம் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.