Published : 05 Mar 2024 04:00 AM
Last Updated : 05 Mar 2024 04:00 AM
உதகை: நீலகிரி மாவட்டம் மஞ்சூரை அடுத்த அணிக்காடு பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவருடைய மனைவி சசிகலா ( 26 ). இவர்களுக்கு 7 வயதில் ஆண் குழந்தையும், 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். அப்பகுதியில் கூலி தொழிலாளர்களாக தம்பதி பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக ஓராண்டுக்கும் மேலாக தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால், அதே ஊரில் உள்ள உறவினர் வீட்டில் குழந்தைகளுடன் சசிகலா வசித்து வந்தார்.
இந்நிலையில், மஞ்சூரை அடுத்த சிவசக்தி நகரை சேர்ந்தவரும், உதகையில் போக்கு வரத்து காவலராக பணிபுரிந்து வந்தவருமான கண்ணன் ( 25 ) என்பவருக்கும், சசிகலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த நவம்பர் 23-ம் தேதி கண்ணனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதனால், கண்ணனின் திருமணத்துக்கு முன்னர் 21-ம் தேதி சசிகலா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மஞ்சூர் காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான போலீஸார் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சசிகலாவின் செல்போனை ஆய்வு செய்த போது கண்ணனும், சசிகலாவும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப் படங்கள் இருந்தன. இது குறித்து சசிகலாவின் உறவினர்கள் அளித்த புகாரை அடுத்து, மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பி பாஸ்கர், ஆய்வாளர் சிவ குமார் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி சந்தேக மரணம் என்ற வழக்கை, தற்கொலைக்கு தூண்டுதல் என்று மாற்றி கண்ணனை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், ஜாமீனில் வெளியில் வந்த கண்ணன் நேற்று பணியில் மீண்டும் சேர்வதாக இருந்தது. ஆனால், இளம் பெண் வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால், கண்ணனின் மனைவியும் அவரை பிரிந்து சென்று விட்டார். சமாதானம் செய்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்துவிடலாம் என்று கண்ணன் முயற்சி செய்த நிலையில், அவருடைய மனைவி வர மறுத்துவிட்டார். இதனால் மன விரக்தி அடைந்த கண்ணன், நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்துள்ளார். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT