

சென்னை: சென்னை பெரம்பூர், சபாபதி தெருவை சேர்ந்தவர் கரிமுல்லாகான் (41). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொளத்தூர் தொகுதி துணை அமைப்பாளராக இருந்தார். மேலும், கட்டுமான தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இவருக்கு பாத்திமா பீவி (36) என்ற மனைவியும், மகனும் உள்ளனர். இந்நிலையில், அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு அதிக கடன் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2-ம் தேதி கரிமுல்லாகான் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் பாத்திமா பீவி தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார். கதவை திறந்து பார்த்தபோது, கரிமுல்லாகான் படுக்கை அறையில் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாத்திமா பீவியும், உறவினர்களும், திரு.வி.க நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீஸார் சம்பவ இடம் விரைந்து கரிமுல்லாகான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.