

சென்னை: பிரதமர் மோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று சென்னை வந்தார். அவர் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நடைபெற்ற மத்திய அரசு விழாவில் கலந்துகொண்டு, புதிய மின் திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மோடி வருகையை எதிர்த்து, ‘கோ பேக் மோடி’ என்ற வாசகம் இடம்பெற்ற கருப்பு பலூனை பறக்க விட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.பி.ரஞ்சன்குமார், டில்லிபாபு ஆகியோரை போலீஸார் நேற்று காலையிலேயே வீட்டு சிறையில் வைத்தனர்.
இந்நிலையில், பனகல் மாளிகை அருகில் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு தலைமையில் நேற்று கருப்பு கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
அவர்கள் 150 பேரை போலீஸார் கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர். மாவட்டத் தலைவர் டில்லிபாபு, வீட்டு சிறையை மீறி, தொண்டர்களுடன் வியாசர்பாடியில் மறியலில் ஈடுபட்டார். அவர்கள், 110 பேரை போலீஸார் கைது செய்தனர்.