Published : 05 Mar 2024 04:12 AM
Last Updated : 05 Mar 2024 04:12 AM
நாகர்கோவில்: நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சாலையில் கனி வளம் ஏற்றிச் சென்ற லாரி, சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து நடக்கும் இத்தகைய விபத்துகள் சென்டர் மீடியன்களை அகற்றுவதற்காக திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் சதியா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு சாலைகளை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதி முதல் செட்டிகுளம் ரவுண்டானா வரை சாலைகளை இரு வழிப்பாதையாக பிரிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் சாலைகளின் நடுவில் சென்டர் மீடியன் எனப்படும் கான்கிரீட் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. குறுகலான சாலைகளிலும் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து தடுப்புகள் மீது பஸ்கள், கார், லாரி மோதி 4 முறை விபத்து ஏற்பட்டது. எனவே, கான்கிரீட் தடுப்புகளை மாற்ற வேண்டும் அல்லது சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பார்வதிபுரத்திலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற டாரஸ் லாரி வெட்டூர்ணிமடம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியின் முன் பகுதி சேதமடைந்தது. கான்கிரீட் தடுப்புகள் ரோட்டில் சிதறின. இதனால் அந்த வழியாக வாகனப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. பஸ்கள், வாகனங்கள் நீண்ட வரிசையில் தேங்கி நின்றன. நாகர்கோவில் போக்கு வரத்து போலீஸார் அங்கு வந்து சாலையில் சிதறிய தடுப்புகளை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் அகற்றினர். கிரேன் மூலம் விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்தினர்.
இது குறித்து போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கனிம வள லாரிகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்த பின்னர் இது போல் தொடர்ந்து சென்டர் மீடியன்களில் மோதி விபத்துகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. சென்டர் மீடியன்களால் பகலில் வேகமாக செல்ல முடியவில்லை என்ற காரணத்தால் அவற்றை அகற்றுவதற்காக திட்டமிட்டு லாரிகளை மோதி விபத்து ஏற்படுத்து கின்றனரா என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT