ரூ.180 கோடி போதைப்பொருள் கடத்தியவரின் மனைவியும் கைது: மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை

ரூ.180 கோடி போதைப்பொருள் கடத்தியவரின் மனைவியும் கைது: மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை
Updated on
1 min read

மதுரை: சென்னையிலிருந்து ரயிலில் மதுரைக்கு ரூ.180 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தியவரின் மனைவியையும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

சென்னையிலிருந்து மதுரை வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 1-ம் தேதி ‘மெத்தபெட்டமைன்’ என்ற போதைப் பொருள் கடத்தியதாக சென்னையைச் சேர்ந்த பிள்ளமண்ட் பிரகாஷ் (42) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 30 கிலோ ‘மெத்தபெட்டமைன்’ பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், சென்னை கொடுங்கையூரில் உள்ள தனது வீட்டில் மெத்தமெட்டமைன் வைத்திருப்பதும், அதைக் கடத்தத் திட்டமிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரது வீட்டுக்குமத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் சென்று சோதனை நடத்தினர். அவரது மனைவி மோனிஷா ஷீலா, அப்பகுதியில்உள்ள குப்பைத் தொட்டியில் போதைப்பொருள் பொட்டலங்களை வீசியது தெரிந்தது. குப்பைத்தொட்டியில் இருந்து 6 கிலோமெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட் டது.

விமானம் மூலம்... மதுரை, சென்னையில் பறிமுதலான 36 கிலோ போதைப் பொருட்களின் மதிப்பு ரூ.180 கோடியாகும். இந்நிலையில், கைதான பிள்ளமண்ட் பிரகாஷின் மனைவிமோனிஷா ஷீலாவை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று விமானம் மூலம் அழைத்துவந்து, விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரைக் கைது செய்தனர்.

இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: பிள்ளமண்ட் பிரகாஷிடம் நடத்திய விசாரணையில், போதைப் பொருளை டாஸ்மாக் கடையில் அறிமுகமான நபர் மூலம் பெற்று, அதை தென் மாவட்டங்களுக்குக் கொண்டுசென்று, குறிப்பிட்ட அந்த நபர்சொல்லும் இடத்தில் வைத்துவிட்டுச் செல்வதற்கு, ஒரு முறைக்கு ரூ.25 ஆயிரம் பெற்றுள்ளது தெரியவந்தது.

மதுரை, தூத்துக்குடிக்கு ஏற்கெனவே அடையாளம் தெரியாத நபர்களிடம் போதைப் பொருள் பொட்டலங்களை அவர் கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. பிள்ளமண்ட் பிரகாஷின் மனைவிக்கும் இதில் தொடர்பு இருப்பதால், அவரைக் கைது செய்தோம்.

மதுரையில் சிக்கிய போதைப்பொருள் ராமேசுவரம் வழியாக இலங்கைக்குக் கடத்த முயற்சி நடந்ததாகவும் தெரிகிறது.

இந்த நெட்வொர்க் மூலம் போதைப் பொருள் கடத்தலுக்கு பிள்ளமண்ட் பிரகாஷ் டெலிவரிசெய்யும் நபராகப் பயன்படுத்தப் பட்டுள்ளார். அவரை இயக்கிய நபர்களின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரிக்கிறோம்.

இவ்வாறு அதிகாரிகள் தெரி வித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in