

ஆவடி: ஆவடி அருகே உள்ள பட்டாபிராம்-பாரதியார் நகரை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி மீனலோச்சனி (40). இவர் கடந்த மாதம் 17-ம் தேதி பட்டாபிராம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர்,மீனலோச்சனி அணிந்திருந்த4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினார்.
இதுகுறித்து, பட்டாபிராம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மீனலோச்சனியிடம் சங்கிலி பறித்த நபர், திருவேற்காடு, அன்பு நகர் பகுதியைச் சேர்ந்த மிட்டாய் கார்த்திக் என்கிற கார்த்திக் (27) என்பதும், அவர் ஏற்கெனவே திருவேற்காடு, ஆவடி, திருநின்றவூர், செங்குன்றம் உள்ளிட்ட காவல் நிலையங்களின் எல்லைகளில் நடைபெற்ற 20-க்கும் மேற்பட்ட வழிப்பறி, சங்கிலி பறிப்பு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, பட்டாபிராம் குற்றப்பிரிவு போலீஸார், தனிப்படை அமைத்து கார்த்திக்கை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம்பட்டாபிராம் ரயில் நிலையம்அருகே பதுங்கியிருந்த கார்த்திக்கை கைது செய்யச் சென்றனர். அப்போது,போலீஸாரிடம் இருந்த தப்பியோட முயன்று, ரயில்நிலைய சுற்றுச்சுவர் மீதுஏறி குதித்த கார்த்திக் தவறிகீழே விழுந்தார். இதில், அவரது வலது கை முறிந்தது.
தொடர்ந்து, கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதையடுத்து, கார்த்திக்கை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து, தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்தனர். பிறகு, போலீஸார் கார்த்திக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.