

மதுரை: மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மர்ம நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டன இது தொடர்பாக ஒருவரை போலீஸார் பிடித்து விசாரிக்கின்றனர்.
மதுரை எல்லீஸ் நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஐ - பிளாக் முன்பாக குடியிருப்பு வாசிகளின் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவது வழக்கம். நேற்று முன்தினம் இரவில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப் பட்டிருந்தன. இந்நிலையில் நள்ளிரவில் திடீரென அங்கு நிறுத்தியிருந்த வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. அப்பகுதியினர் திரண்டு தீயை அணைத்தனர். தகவல் அறிந்த எஸ்.எஸ். காலனி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிள் உட்பட 4 மோட்டார் சைக்கிள்கள், 5 சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது தெரியவந்தது. மது போதையில் யாரும் நள்ளிரவில் தீ வைத்தனரா அல்லது முன் விரோதம் காரணமாக ஒருவரின் இரு சக்கர வாகனத்தை எரிக்க திட்டமிட்டபோது, அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற வாகனங்களுக்கும் தீ பரவியதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர். அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து, அதன் அடிப்படையில் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.