

திருப்பூர்: திருப்பூரில் அரசு அதிகாரி போல் நடித்து, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ.1 கோடி வரை மோசடி செய்த தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.
அவிநாசி சேடர்பாளையத்தைச் சேர்ந்தவர் பாமா. இவருக்கு பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த கவிதா (40) மற்றும் அவரது கணவர் ராஜ்குமார் (42) ஆகியோர் அறிமுகமாகினர். இதில் கவிதா என்பவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரியாக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்ப வைக்கும் வகையில் போலியாக அடையாள அட்டை ஒன்றையும் காண்பித்துள்ளார். இதனை பார்த்த பாமா, கவிதாவை அரசு அதிகாரி என நம்பியுள்ளார். மேலும், தானும் தனது கணவரும் அரசு வேலை வாங்கி கொடுத்து வருவதாகவும், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய, பாமா அரசு வேலை பெறுவதற்காக ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் சொன்னபடி அரசு வேலை வாங்கி கொடுக்காமல், தம்பதியினர் பாமாவை ஏமாற்றியுள்ளனர். இதன் பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த பாமா, இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில் மோசடியில் ஈடுபட்ட தம்பதியான கவிதா மற்றும் ராஜ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் சேர்ந்து 20 பேரிடம் ரூ.1 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்து வருகின்றனர். அரசு வேலைவாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெருமாநல்லூர் தம்பதியரை போலீஸார் கைது செய்தனர்.