Published : 03 Mar 2024 04:04 AM
Last Updated : 03 Mar 2024 04:04 AM

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய 5 பேர் உயிரிழப்பு? - போலீஸார் தீவிர விசாரணை

கடலில் மாணவர்களை மீட்ட மீனவர்கள்.

மாமல்லபுரம்: மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த ஆந்திர கல்லூரி மாணவர்கள் கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி 10 பேர் மாயமான நிலையில் 6 பேர் மீட்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீதமுள்ள 4 மாணவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆந்திரா மாநிலம், அனந்த பூர் பகுதியில் இயங்கும் அரசுக் கலை கல்லூரி மாணவர்கள் 18 பேர், சித்தூர் மாவட்டம் நவகாம் பள்ளியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 22 பேர் என மொத்தம் 40 மாணவர்கள் ஒன்றிணைந்து சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி, 40 மாணவர்களும் ஒரு பேருந்து மூலம் நேற்று காலை மாமல்லபுரம் வந்தனர். பின்னர், மாணவர்கள் 2 குழுக்களாக பிரிந்து புராதன சின்னங்களை சுற்றி பார்த்தனர். தொடர்ந்து, இரண்டு குழுவில், ஒரு குழுவை சேர்ந்த 20 மாணவர்கள் புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்துவிட்டு நேற்று காலை 10 மணி அளவில் மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் வலது புறத்தில் உள்ள கடற்கரைக்குச் சென்று குளித்தனர்.

அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலை 10 பேரை இழுத்துச் சென்றது. இதையடுத்து, அருகில் இருந்த சக மாணவர்கள் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால், ராட்சத அலை 10 பேரையும் நடுக் கடலுக்கு இழுத்துச் சென்றது. சக மாணவர்கள், சுற்றுலா வந்த பயணிகள், கடைக் காரர்கள் அளித்த தகவலின் படி மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அப்போது, மாமல்லபுரம் மீனவர் குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் சஞ்சய் குமார், ராஜி, விஜி, சதிஷ் மற்றும் மணிமாறன் ஆகியோர் சர்பிங் பலகை மூலம் கடலுக்கு சென்று நீண்ட போராட்டத்துக்கு பிறகு 6 பேரை படகு மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களில் விஜய் ( 18 ), என்ற கல்லூரி மாணவன் கரைக்கு வந்த சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த விஜய்

கார்த்திக் ( 19 ) என்ற மாணவன் ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற 4 மாணவர்களும் சகஜ நிலைக்கு திரும்பினர். உயிரிழந்த விஜய்யின் உடலை மாமல்லபுரம் போலீஸார் மீட்டு பிரேத பரி சோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், மாயமான மோனிஷ் ( 19 ) , பார்த்தி ( 18 ), ஷேசா ரெட்டி ( 18 ), பெத்து ராஜ் ( 19 ) ஆகிய 4 மாணவர்களை தேடும் பணியில் மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல் படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை மாமல்லபுரம் சிறப்பு நிலைய தலைமை அலுவலர் ரமேஷ் பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: காலையிலிருந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உதவியாக சென்னை மெரினா மீட்பு குழுவும் களத்தில் இறங்கி உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 20 பேர் கொண்ட குழுவாக தேடி வருகிறோம். கூடுதலாக கடலோர காவல் படையும் ரோந்து பணியில் ஹெலிகாப்டர் மூலம் தேடி வருகின்றனர் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x