Published : 03 Mar 2024 04:06 AM
Last Updated : 03 Mar 2024 04:06 AM

ஆன்லைன் மோசடியில் ரூ.66 கோடி வசூலித்த புகாரில் ஒருவர் கைது @ சென்னை

சந்தோஷ்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரகத்தில் ஏ.எம். முகமது அமீன் என்பவர் அளித்தபுகார் மனு: "என்னுடன் படித்த நண்பர் ஜே.எம். விஜய் என்பவர் என்னை அணுகி, தான் தற்போது சென்னை, ஆழ்வார் பேட்டையில் இயங்கி வரும் ‘எஃப்எக்ஸ் யோகி அட்வைசர்ஸ் அண்ட் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தை அவரது நண்பர் சுந்தர மூர்த்தியுடன் இணைந்து நடத்தி வருவதாகவும், அக்கம்பெனியில் தான் இயக்குநராக உள்ளதாகவும், அதில் இருவருக்கும் 50:50 சதவீத பங்குகள் உள்ளதாகவும் கூறினார்.

மேலும், இந்நிறுவனத்தின் மூலமாக ஆன்லைன் ஃபாரக்ஸ் டிரேடிங் வர்த்தகம் செய்து வருவதாகவும், அவர்களுடைய நிறுவனத்தில் பணம் முதலீடு செய்யுமாறும் கூறினார். ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதாமாதம் 4 சதவீதம் லாபத் தொகையாக ரூ.4 ஆயிரம் கொடுப்பதாகக் கூறினார். அத்துடன், லாபத் தொகையுடன் முதலீடு செய்யும் பணத்தையும் ஒரு வருடத்தில் திரும்ப தந்து விடுவதாக கூறினார்.

இதையடுத்து, நானும், எனக்குத் தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 100 நபர்களிடம் இருந்து மேற்கண்ட நிறுவனத்தின் வங்கி கணக்குக்கு ரூ.65 கோடி 98 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை முதலீடு செய்தேன். இப்பணத்தை விஜய், சுந்தர மூர்த்தி ஆகிய இருவரும் கிரிப்டோ கரன்சியாக மாற்றம் செய்தனர்.

‘ஏதர்-எஃப்க்ஸ்’ என்னும் புரோக்கரேஜ் தளத்தை சுந்தர மூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் ரவி குமார், சந்தோஷ் மூலமாக போலியான ஆன்லைன் வர்த்தக செயலியை உருவாக்கி அவர்களுடைய புரோக்கரேஜ் தளத்தின் வழியாக ‘மெட்டா டிரேடர் 4’-ல் எனக்கு ஆன்லைன் ஃபாரக்ஸ் டிரேடிங் கணக்கு ஆரம்பித்துக் கொடுத்தனர். ஆனால், அந்த டிரேடிங் கணக்கின் பின் நம்பர், பாஸ்வேர்டு ஆகிய அனைத்தும் சுந்தர மூர்த்தி வசம் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டுஅக்.14-ம் தேதி விஜய், சுந்தர மூர்த்தி, ரவிக் குமார், சந்தோஷ் உள்ளிட்டோர் தலைமறைவாகி விட்டனர். என்னை நம்ப வைத்து நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றிய நண்பர் விஜய் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு இந்த மோசடியில் ஈடுபட்ட சந்தோஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மற்ற நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x