

மதுரை: மதுரையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடமிருந்து மொபைல் போன்களை பறித்து வந்த 2 பட்டதாரி இளைஞர்களை, தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
மதுரை அவனியாபுரம் அருகே பெரியசாமி நகர் முன்பு பிப்.21-ம் தேதி பகலில் வைத்தீஸ்வரி என்பவர் மொபைல் போனில் பேசிக் கொண்டே தனியாக நடந்து சென்றார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த நபர்கள், அப்பெண்ணின் மொபைல் போனை பறித்துச் சென்றனர். அவரது புகாரின் பேரில், அவனியாபுரம் போலீஸார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். அதேபோல், அன்றிரவு வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடமிருந்து மொபைல் போனை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
தொடர்ந்து, பிப்.23-ல் தல்லாகுளம், பிப்.24-ல் கூடல் புதூர் என 5-க்கும் மேற்பட்ட இடங்களில் பெண்களிடம் மொபைல் போன் வழிப் பறியில் மர்ம நபர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார் சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்த போது, விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தில் சுற்றி வந்த 2 இளைஞர்கள் இச்சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டது தெரியவந்தது. அதனடிப்படையில், நேற்று முன்தினம் இரவு வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் போலீஸார் ரோந்து சென்றனர்.
அப்போது, சந்தேகத்துக் குரிய அதே பதிவெண் கொண்ட இரு சக்கர வாகனத்தை போலீஸார் பார்த்து பின் தொடர்ந்தனர். அப்போது, நடந்து சென்ற பெண் ஒருவரிடம் மொபைல் போனை அவர்கள் பறிக்க முயன்றதை போலீ ஸார் பார்த்தனர். அவர்களை பின்தொடர்ந்து விரட்டிச் சென்ற தனிப்படை சார்பு - ஆய்வாளர் மஞ்சமலை பாண்டியன் மற்றும் காவலர் ராம் பிரசாத் ஆகியோர், வழிப் பறியில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் கோ.புதூரைச் சேர்ந்த வீர கார்த்தி ( 24 ), தேனி மாவட்டம் கம்பம் அருகே கே.கே.பட்டி ஹரி பிரசாத் ( 22 ) எனத் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் மதுரை யிலுள்ள தனியார் கல்லூரியில் படித்த போது நண்பர்களானவர்கள். இவர்களிடமிருந்து 5-க்கும் மேற்பட்ட மொபைல் போன்களை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.