

ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரையில் வாடகை கார் ஓட்டுநரை கொலை செய்து, காரை கடத்திய கணவன், மனைவி உட்பட 4 பேரை, திருநெல்வேலியில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸார் கைது செய்தனர்.
மதுரை பைக்காரா பகுதியைச் சேர்த்த கந்தசாமி மகன் முருகன் ( 68 ). இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். முருகன், மதுரை ரயில் நிலையப் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வாடகை கார் ஓட்டி வந்தார். கடந்த புதன் கிழமை காலை 3 பேர் இவரை அணுகி, விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளனர். அவர்களை காரில் ஏற்றிக் கொண்டு சென்ற முருகன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் சோழங்குளம் கண்மாய் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர். இதனிடையே, ஸ்ரீவில்லிபுத்தூர் அசோக் நகரைச் சேர்ந்த ருக்சனா பர்வீன் என்பவர் தனது மகள் ஜெசிரா பானுவை, அவரது கணவரான நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன் தனது நண்பர்களுடன் காரில் வந்து கடத்திச் சென்றதாக, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், முகமது அசாருதீன் தனது நண்பர்களுடன் மதுரையிலிருந்து காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வந்து, ஓட்டுநரைக் கொலை செய்து விட்டு ஜெசிரா பானுவை கடத்திச் சென்றது உறுதியானது.
இதையடுத்து, திருநெல் வேலியில் இருந்த முகமது அசாருதீன் ( 26 ), மனைவி ஜெசிரா பானு ( 26 ) மற்றும் அவரது நண்பர்களான ஸ்ரீவில்லிபுத்தூர் நல்லகுற்றாலம் தெருவைச் சேர்ந்த அய்யாகுட்டி மகன் தங்க மாரியப்பன் ( 22 ), சிவகாசி பள்ளப்பட்டியைச் சேர்ந்த மாடசாமி மகன் விக்னேஷ் ( 26 ) ஆகிய 4 பேரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது: நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன் 2 மாதங்களுக்கு முன்பு மனைவி ஜெசிரா பானு ஊருக்கு வந்தபோது, கூமாபட்டியில் மொபைல் போன் கடையில் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த பின், ஜெசிரா பானுவை அவரது பெற்றோர் அசாருதீனுடன் அனுப்ப மறுத்து விட்டனர். ஆனால், ஜெசிரா பானு தனது கணவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.
அதன் பின்னர், முகமது அசாருதீன் தனது நண்பர்களான தங்க மாரியப்பன், விக்னேஷ் ஆகியோருடன் சேர்ந்து, மதுரையில் இருந்து காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துள்ளார். அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு பகுதியில் கார் ஓட்டுநர் முருகனை கொலை செய்துவிட்டு, அவரது உடலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சோழங்குளம் கண்மாயில் வீசிச் சென் றுள்ளனர். அதன்பின், அசோக் நகர் சென்று ஜெசிரா பானு பெற்றோரிடம் தகராறு செய்து, அவரை கடத்துவது போல் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கிருந்து அவர்கள் காரில் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலுக்குச் சென்றனர். அங்கு காரை அடை யாளம் கண்ட மதுரை வாடகை கார் ஓட்டுநர், அவர்களிடம் கார் குறித்து விசாரித்ததால், அங்கிருந்து தப்பிச் சென்று, காரை வேறொரு பகுதியில் நிறுத்திவிட்டு வள்ளியூருக்குச் சென்றுள் ளனர்.
இது குறித்து தகவ லறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தனிப்படை போலீஸார், திருநெல்வேலி சென்று தங்க மாரியப்பன், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர். வெளியூர் தப்ப முயன்ற முகமது அசாருதீன், ஜெசிரா பானு இருவரையும் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் கைது செய்தனர். டிஎஸ்பி மகேஷ் ஜெயக்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் அவர்களிடம் விசாரிக்கின்றனர்.