

சென்னை: வேலை செய்த வீட்டிலேயே நகை திருட்டில் ஈடுபட்டதாக அந்த வீட்டில் வேலை செய்த பணிப்பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை, தி.நகர், சாரங்கபாணி தெருவில் வசிப்பவர் மருத்துவர் பங்கஜ்குமார் (32). இவரது மனைவி சில தினங்களுக்கு முன் திருமண நிகழ்ச்சிக்குச் செல்வதற்காக வீட்டின் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளைப் பார்த்தபோது, வளையல், நெக்லெஸ், செயின் உள்ளிட்ட 90 பவுன் நகை மற்றும் ஐபோன் ஆகியவை காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த பங்கஜ்குமார் இதுகுறித்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக அவரது வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண் தி.நகரைச் சேர்ந்த விஜயலட்சுமி (22), இவரது கணவரின் தம்பி அதே பகுதி வருண்குமார் (22), சைதாப்பேட்டை ஜஸ்டின் (40) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.
திருடி அடகு வைப்பு: விசாரணையில் கைதான விஜயலட்சுமி, பங்கஜ்குமார் வீட்டில் 4 ஆண்டுகளாக வேலை செய்து வந்ததும், 2021-ம் ஆண்டுமுதல் சிறிது சிறிதாக வீட்டிலிருந்து தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஐபோன் ஆகியவற்றை திருடிச் சென்று, அவரது கணவரின் தம்பியான வருண்குமார் உதவியோடு, நண்பரான ஜஸ்டின் மூலம் பல இடங்களில் நகைகளை அடகு வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் திருடப்பட்ட நகைகளை மீட்டனர். மேலும், கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.