

சென்னை: தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுகவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையைச் சேர்ந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம், காம்தார் நகரில் உள்ள திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான கூரியர் நிறுவனத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்துவதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த அலுவலகத்துக்குச் சென்று படம் பிடிக்க முயன்ற தனியார் தொலைக்காட்சி நிறுவன ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர்.
காயமடைந்த செந்தில்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்தனர். பின்னர் தாக்குதல் நடத்தியதாக திமுக மேற்கு மாவட்ட துணை செயலாளர் கலைச்செல்வன் (47), மேற்கு மாவட்ட மகளிர் அணித் தலைவி பச்சையம்மாள் (55) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.