

சிவகங்கை: காளையார்கோவில் அருகே 5 பேரை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளியைப் பிடித்த போலீஸாரை தென்மண்ட ஐஜி கண்ணன் பாராட்டினார். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கல்லுவழியில் ஜன.26-ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொடூரமாகத் தாக்கிவிட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்துத் தப்பினர்.
இது தொடர்பாக தேவகோட்டை அருகே தென்னீர்வயலைச் சேர்ந்த தினேஷ்குமாரை (32) தனிப்படை போலீஸார் கைது செய்தனர். மேலும் தென்னீர்வயல் முத்தூரணிப் பகுதியில் கொள்ளைக்குப் பயன்படுத்திய ஆயுதத்தை எடுக்கச் சென்றபோது போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற அவரை காலில் சுட்டு பிடித்தனர்.
கைதான தினேஷ்குமாரிடமிருந்த 33 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம், 3 இரு சக்கர வாகனங்கள், 2 டிவிகள், ஒரு மொபைல், ஒரு ஏசி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் தினேஷ்குமாருக்கு ஏற்கெனவே 2020 ஜூலை 13-ம் தேதி காளையார்கோவில் அருகே முடுக்கூருணியில் ராணுவ வீரரின் மனைவி, தாயாரை கொலை செய்து கொள்ளையடித்தது, 2023 ஜன.10-ம் தேதி தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டையில் தாய், மகளை கொலை செய்து கொள்ளையடித்தது ஆகிய 2 வழக்குகளிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்த டிஎஸ்பிகள் சிபிசாய் சவுந்தர்யன், ஆத்மநாதன், இன்ஸ்பெக்டர்கள் ஆடிவேலு, கணேசமூர்த்தி, சந்திர மோகன், ரவீந்திரன், எஸ்ஐகள் சித்திரவேல் சரவணக்குமார், ஹரி கிருஷ்ணன், குகன், பிரதாப், ரூபன்ராஜ் ஆகியோரை தென்மண்டல ஐஜி கண்ணன், ராமநாதபுரம் சரக டிஐஜி துரை, சிவகங்கை எஸ்பி அரவிந்த் ஆகியோர் பாராட்டிச் சான்று வழங் கினர். மேலும் கல்லுவழி கிராம மக்கள், பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் போலீஸாரை சந்தித்து நன்றி தெரி வித்தனர்.