

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உளுந்தை ஊராட்சி பகுதியில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை நகர் ஊரமைப்பு திட்ட அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக கூறி, உளுந்தை ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அறிவிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த மாதம் சம்பந்தப்பட்ட தனியார் தொழிற்சாலையின் மனித வள மேம்பாட்டு அதிகாரியான சின்னமுனியாண்டி, ஊராட்சி நிர்வாகத்தின் அறிவிப்பாணைக்கு விளக்கம் அளிப்பதற்காக ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் ரமேஷை சந்திக்க சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் ரமேஷ், சின்னமுனியாண்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, கடந்த மாதம் 25-ம் தேதி, சின்னமுனியாண்டி அளித்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் உளுந்தை ஊராட்சி தலைவர் ரமேஷிடம் விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து போலீஸார் ரமேஷ் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.