

சென்னை: மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் நகை திருட்டில் ஈடுபட்டதாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இருவரை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை நந்தம்பாக்கம், அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி அம்மாள் (85). இவர் கடந்த ஜனவரி 22-ம் தேதி நந்தம்பாக்கம், மணப்பாக்கம் பிரதான சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, டிப்-டாப் உடையணிந்து வந்த இருவர் மூதாட்டி கண்மணியிடம், ``இங்குதிருட்டு சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. எனவே தாங்கள் கழுத்திலும், கையிலும் அணிந்துள்ள தங்க நகைகளைக் கழற்றி கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள்'' என அக்கறையுடன் ஆலோசனை வழங்கினர்.
இதை நம்பிய மூதாட்டி தான் அணிந்திருந்த செயின், வளையல் உள்ளிட்ட 9 பவுன் நகைகளைக் கழற்றி அவர்களிடம் கொடுத்தார். அந்த நபர்கள் ஒரு பேப்பரில் மூதாட்டி கொடுத்த நகைகளை மடித்து கொடுத்தனர்.
சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த கண்மணி, பேப்பரை திறந்துபார்த்தபோது அதில், நகைகளுக்கு பதிலாக சிறிய அளவிலான கற்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றிலும் பொருத் தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியைச் சேர்ந்த கத்தி ரவீந்திர பாபு (46), அவரது கூட்டாளியான அதே மாநிலம் மந்தனபள்ளி தாலுகா ஜென்மபூமி காலனியைச் சேர்ந்த பாபர் அலி (47) ஆகிய இருவரைக் கைது செய்தனர்.
இவர்கள் காரில் வந்து மூதாட்டியிடம் நூதன முறையில் நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.