

சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் உள்ள பெஜவாடா லைன் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள் (40). இவரது எதிர் வீட்டில் சாந்தி (37) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஏற்கெனவே தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சாந்தி, தான் தண்ணீர் பிடித்த பிளாஸ்டிக் குடத்தை முனியம்மாள் வீட்டின் வாயிலில் வைத்துள்ளார். இதனால் கோபமடைந்த முனியம்மாள் "ஏன் இங்கு குடத்தை வைத்துள்ளாய்?" என்று கேட்டுள்ளார். தொடர்ந்து இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
சப்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த சாந்தியின் மகள் வள்ளி (20), தாய்க்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது முனியம்மாளை இருவரும் அருகில் கிடந்த கட்டையால் சரமாரியாகத் தாக்கிவிட்டு, அங்கிருந்து சென்றனர்.
காயமடைந்த முனியம்மாளை மீட்ட அக்கம்பக்கத்தினர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்தனர். பின்னர் வீடு திரும்பிய முனியம்மாளுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து மீண்டும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர், முனியம்மாள் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்த வண்ணாரப்பேட்டைபோலீஸார் மருத்துவமனைக்குச் சென்றுமுனியம்மாள் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சாந்தி, அவரது மகள் வள்ளி ஆகியோரைக் கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.