Published : 23 Feb 2024 06:09 AM
Last Updated : 23 Feb 2024 06:09 AM

சென்னை | எல்.கே.சுதீஷ் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி: கட்டுமான நிறுவன உரிமையாளர், மேலாளர் கைது

சாகர், சந்தோஷ் சர்மா

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருவதாக, விஜயகாந்த் மைத்துனரான சுதீஷின் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கட்டுமான நிறுவன உரிமையாளர் மற்றும் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ். இவர் தேமுதிகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்நிலையில், இவரது மனைவியான பூர்ண ஜோதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார்.

அதில், ‘‘தனக்கும் தனது கணவருக்கும் சொந்தமாக சென்னை மாதவரம் மெயின் ரோடு 200 அடி சாலையில் சுமார் 2.10 ஏக்கர் காலியிடம் இருந்தது. அதில், அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்பனை செய்வதற்காக சென்னையிலுள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த சந்தோஷ் சர்மா (44) என்பவரின் நிறுவனத்துடன் 2014-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்தோம்.

அதன்படி, மொத்தம் 234 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி அதில் 78 வீடுகளை நில உரிமையாளரான தனக்கும், 156 வீடுகளை சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கும் ஒதுக்கி ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்நிலையில் தனக்கு ஒதுக்கிய 78 வீடுகளில் 48 வீடுகளை தனக்கு தெரியாமல், தனது கையெழுத்தை போலியாக போட்டு சந்தோஷ் சர்மாவின் கட்டுமான நிறுவனம் வெளி நபர்களுக்கு விற்பனை செய்து அதன் மூலம் சுமார் ரூ.43 கோடி மோசடி செய்துள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளரான அடையாறு கற்பகம் கார்டன், 1வது மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் சர்மா, அந்நிறுவனத்தின் மேலாளர்சென்னை ஷெனாய்நகர் ராஜம்மாள் தெருவைச் சேர்ந்த சாகர் (33) மற்றும் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என புகாரில் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் செந்தில்குமார், துணை ஆணையர் நிஷா மேற்பார்வையில், ஆவணங்கள் மோசடி பிரிவு ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில், புகாரில் தெரிவித்த தகவல்கள் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார் புகாருக்குள்ளான சந்தோஷ் சர்மா,சாகர் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் சிறையிலடைத்தனர்.

மேலும், விசாரணையில் தற்போது கைதான சந்தோஷ் சர்மா ஒரேவீட்டை பலருக்கு விற்று பொது மக்களை ஏமாற்றி பண மோசடி செய்ததாக ஏற்கெனவே சென்னை மத்திய குற்றப்பிரிவில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது என்பது தெரியவந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x