Published : 23 Feb 2024 08:39 AM
Last Updated : 23 Feb 2024 08:39 AM
சென்னை: கலாஷேத்ராவில் நிகழ்ந்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக விசாரணைக் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள சம்பவங்கள் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் உள்ளன என்று வேதனை தெரிவித்துள்ள சென்னைஉயர் நீதிமன்றம், குற்றச் சாட்டுக்குள்ளான பேராசிரியரை உடனடியாக பணிநீக்கம் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா அறக்கட்டளையின்கீழ் இயங்கி வரும் ருக்மணி தேவி அருண்டேல் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி அளித்தபாலியல் அத்துமீறல் புகாரின் அடிப்படையில், அந்தக் கல்லூரி பேராசிரியர் ஏற்கெனவே கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதேபோல மற்றொரு மாணவியும், மற்றொரு பேராசிரியர் மீது பாலியல் ரீதியாக குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி கண்ணன் தலைமையிலான குழுவில், அந்த அறக்கட்டளையின் இயக்குநரான ரேவதி ராமச்சந்திரன் இடம்பெறக் கூடாது என்றும், மாணவியர் மற்றும் பெற்றோர் தரப்பு பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் குழுவை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரியும் அக்கல்லூரி மாணவிகள் 7 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், கலாஷேத்ரா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில், பணியிடங்களில் பெண்களுக்கான பாலியல் தொல்லை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், பல்கலைக்கழக மானியக்குழு சட்டம் உள்ளிட்ட சட்ட விதிகளின் அடிப்படையில் பாலியல் தொல்லைகளைத் தடுக்க விரிவான கொள்கை வகுக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைகை, ‘‘இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி கண்ணன் அறிக்கையை பொது வெளியில் வெளியிட வேண்டும்.
கொள்கைகளை வகுக்கும்போது மாணவிகளின் கருத்துகளையும் கேட்க வேண்டும்’’ என்று கூறி கலாஷேத்ரா வகுத்துள்ள கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். கலாஷேத்ரா அறக்கட்டளை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், கலாஷேத்ரா வகுத்துள்ள கொள்கைகள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகள் கோரப்படவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி அனிதா சுமந்த் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகாரை விரைவாக விசாரிக்காததன் மூலம் கலாஷேத்ரா அறக்கட்டளை பழிச்சொல்லுக்கு ஆளாகியுள்ளது. இந்த பாலியல் ரீதியிலான விவகாரம் விரும்பத்தகாதது மட்டுமின்றி, மிகவும் கவலைக்குரிய ஒன்று.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி கே.கண்ணன் தலைமையிலான குழு அளித்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள விஷயங்கள் அருவருக்கத்தக்க வகையில் உள்ளன.
மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடைபெறாத வண்ணம் தடுக்க நீதிபதி கண்ணன் குழு அளித்துள்ள பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகம் உடனடியாக பரிசீலிக்க வேண்டும். மேலும், குற்றச்சாட்டுக்குள்ளான பேராசிரியரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT