புனே, டெல்லியில் நடந்த சோதனையில் ரூ.2,500 கோடி ‘மியாவ் மியாவ்’ போதைப் பொருள் பறிமுதல்

புனே, டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்ட ‘மியாவ் மியாவ்’ போதைப் பொருட்களுடன் போலீஸார்.
புனே, டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்ட ‘மியாவ் மியாவ்’ போதைப் பொருட்களுடன் போலீஸார்.
Updated on
1 min read

புதுடெல்லி: புனே மற்றும் டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸார் 2 நாட்களாக நடத்திய தீவிர சோதனையில் ரூ.2,500 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் (எம்டி) போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

புதுடெல்லி மற்றும் புனே நகரம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 1,100 கிலோ எடை கொண்ட தடைசெய்யப்பட்ட மெபெட்ரோன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் இதை ‘மியாவ் மியாவ்’ என்ற பெயரில் குறிப்பிடுகின்றனர். இதன் மதிப்பு ரூ.2,500 கோடியை தாண்டும். சோதனையின்போது, மெபெட்ரோன் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 700 கிலோ மெபெட்ரோன் கைப்பற்றப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின்படி, டெல்லியின் ஹவுஸ் காஸ் பகுதியில் இருந்து 400 கிலோ செயற்கை ஊக்க மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

புனேவில் குறிப்பாக, குர்கும்ப் எம்ஐடிசி பகுதியில் மெபெட்ரோன் போதை மருந்து அதிக அளவில் பதுக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இங்கிருந்துதான் டெல்லி சேமிப்பு கிடங்குகளுக்கு போதைப் பொருள் சிறிது சிறிதாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புனே காவல் துறை ஆணையர் அமிதேஷ் குமார் கூறும்போது, ‘‘போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புனே தொழிற்சாலையின் உரிமையாளரான அனில் சேபிள் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட நபர்களுக்கும், பிரபல போதைப் பொருள் கடத்தல்காரர் லலித் பாட்டீலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த வழக்கில் அவருக்கு உள்ளதொடர்பு குறித்து தீவிர விசாரணை நடக்கிறது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in