

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள நாராயணம்பாளையம் கிராமத்தில், மாதா கோயில் தெருவில்நேற்று முன்தினம் மாலை இளைஞர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் இளைஞர்களிடம் கேள்வி எழுப்பினர். இதனால், பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த இளைஞர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்நிலையில், சிறிது நேரம் கழித்து அந்த இளைஞர்கள் உள்ளிட்ட 6 பேர்,இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்து, பிரச்சினை ஏற்பட்ட வீதியில் பெட்ரோல் குண்டுகளை வீசினர். அவர்களை பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஓமலூர்போலீஸார், காமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார், சாரதி, கோபாலகிருஷ்ணன், சந்தோஷ்குமார் மற்றும் சிறுவர்கள் இருவர் என 6 பேரைக் கைது செய்தனர்.