

ஈரோடு: நம்பியூர் அருகே வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற தோட்டக் கலைத் துறை உதவியாளரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரை அடுத்த கேத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். நேற்று முன்தினம் அதிகாலை, இவரது வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர், நடராஜன் மனைவி அணிந்திருந்த செயினை பறிக்க முயற்சித்துள்ளார். அப்போது அவர் சத்தமிடவே, திருட வந்தவர் தப்பியோடினார். வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தன. இது தொடர்பாக வழக்குப் பதிந்த கடத்தூர் போலீஸார், கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர், அதே பகுதியைச் சேர்ந்த தயானந்த் என்பது தெரியவந்தது. இவர் 2019 -ம் ஆண்டு முதல், நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறையில் உதவியாளராக பணியாற்றி வந்ததும், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியத்தில் முறைகேடு செய்தது தொடர்பான குற்றச்சாட்டில் விடுப்பில் இருப்பதும் தெரியவந்தது. முறைகேடு செய்து கையாடல் செய்த பணத்தை மூன்று மாதத்தில் திருப்பி கட்டுவதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ள தயானந்த், அதற்காக விடுமுறை பெற்று வந்து, திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து தயானந்தை கடத்தூர் போலீஸார் கைது செய்தனர். கொள்ளையடிப்பது எப்படி என்று யூ டியூப் வலைத்தள வீடியோவை பார்த்து திருட்டு முயற்சியில் தயானந்த் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.