

ராமநாதபுரம்: கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு திரும்பிய மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த ராமர் பாண்டி என்ற ராமகிருஷ்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறி 5 பேர் புதன்கிழமை முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
கடந்த 30.10.2012 அன்று மதுரை மாவட்டம், சிலைமான் அருகே புளியங்குளத்தைச் சேர்ந்த சிலர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு பசும்பொன் சென்று விட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். மதுரை சிந்தாமணி புறக்காவல் நிலையம் அருகே சென்றபோது கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் புளியங்குளத்தை சேர்ந்த ஜெயபாண்டி, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த ராமர் பாண்டி என்ற ராமகிருஷ்ணன்(38), மோகன், கிளி கார்த்திக் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் பெற்று 2013-ம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் கையொப்பமிட்டு வந்தனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர்களில் ராமர் பாண்டி, கிளி கார்த்திக் ஆகிய இருவரும் மதுரையில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறியதை தொடர்ந்து, 2020 முதல் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி கையொப்பமிட்டு வந்தனர்.
இந்நிலையில் வழக்கம்போல் கடந்த திங்கட்கிழமை கரூர் நீதிமன்றத்தில் ஆஜரவதற்காக ராமகிருஷ்ணனும், கிளி கார்த்திக்கும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு இருவரும் மதுரை நோக்கி வந்தனர். இவர்கள் திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி அருகே பேரப்பாடி பிரிவில் சென்றபோது, ஜீப்பில் வந்த ஒரு கும்பல் இருசக்கர வாகனத்தில் சென்ற ராமர் பாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. கிளி கார்த்திக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இக்கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி மதுரை கருப்பாயூரணி சேதுராமன் மகன் வினோத் கண்ணன் (26), கீரனூர் வீரணன் மகன் மகேஷ் குமார்(24), மேலூர் ராமஜெயம் மகன் தனுஷ் (21), ஆண்டார் கொட்டாரம் முருகேசன் மகன் தர்மா (25), ஆண்டார் கொட்டாரம் முருகன் மகன் ரமேஷ் (23) ஆகிய 5 பேர் இன்று காலை ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நீதித்துறை நடுவர் அருண் சங்கர் முன்னிலையில் சரணடைந்தனர்.
நீதித்துறை நடுவர் 5 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் விருதுநகர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனையடுத்து துப்பாக்கி ஏந்திய பலத்த பாதுகாப்புடன் 5 பேரும் விருதுநகர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.