Published : 21 Feb 2024 06:30 AM
Last Updated : 21 Feb 2024 06:30 AM
சென்னை: பண மோசடி புகாரில் நடிகையும்,பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திரைப்பட பாடலாசிரியரான சிநேகன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றுஅளித்திருந்தார். அதில், “சினேகம்பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை பெயரைத் தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்து வரும் நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்து இருந்தார்.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, முறைப்படி பதிவு செய்து சினேகம் அறக்கட்டளை பெயரில் நற்பணிகளை செய்து வரும் தன் மீது அபாண்டமாக பழிசுமத்தி அவதூறு பரப்பும் சிநேகன் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜெயலட்சுமியும், சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
நீதிமன்றத்தை நாடினர்: இதையடுத்து, இரு தரப்பையும் பலமுறை அழைத்து போலீஸார் விசாரித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து இரு தரப்பினரும் நீதிமன்றத்தை நாடினர். அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாடலாசிரியர் சிநேகன் மீது வழக்குப்பதிவு செய்ய எழும்பூர் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் திருமங்கலம் காவல் துறையினர் சிநேகன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என சிநேகன் சென்னைஉயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, சிநேகன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், ஏற்கெனவே சிநேகன் அளித்த புகாரின்பேரில், ஜெயலட்சுமி மீது திருமங்கலம் காவல் நிலைய போலீஸார் மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர்.
கடும் வாக்குவாதம்: அதைத் தொடர்ந்து, திருமங்கலத்தில் உள்ள ஜெயலட்சுமியின் வீட்டுக்குச் சென்ற போலீஸார், அவரைக் கைது செய்தனர். அப்போது, போலீஸாருடன் ஜெயலட்சுமி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT