

கரூர்: வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மதுரை திரும்பிய இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அவனியாபுரத்தில் கடந்த 2012ம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவின்போது ஏற்பட்ட மோதலில் வெடிக்குண்டு வீசி தாக்கியதில் சிலர் உயிரிழந்தனர். இவ்வழக்கில் மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி ராமர் என்கிற ராமகிருஷ்ணன் (36). (முதல் குற்றவாளி) மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்கிற கிளி கார்த்திக் (36) உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.
மதுரை நீதிமன்றத்தில் நடந்த வழக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு மாவட்டத்திற்கு மாற்ற கோரிக்கை வைத்ததை அடுத்து இவ்வழக்கு விசாரணை கடந்த ஓராண்டுக்கு மேலாக கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றவர்கள் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். ஜாமீனில் இருந்து ராமர், கார்த்திக் ஆகியோர் இவ்வழக்கு விசாரணைக்காக கரூர் நீதிமன்றத்தில் இன்று (பிப்.19ம் தேதி) ஆஜராகிவிட்டு இரு சக்கர வாகனத்தில் மதுரை திரும்பியுள்ளனர்.
அப்போது அரவக்குறிச்சி அருகேயுள்ள பேரம்பாடி பிரிவு அருகே செல்லும்போது காரில் வந்த மர்மக் கும்பல் அரிவாளால் ராமர் தலையை வெட்டி சிதைத்துவிட்டு, கார்த்திக்கையும் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் ராமர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கார்த்திக் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராமர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.