ஸ்ரீவைகுண்டம் அருகே ஓபிஎஸ் அணி நிர்வாகி கொலை: ஊராட்சி முன்னாள் தலைவர் சரண்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஓபிஎஸ் அணி நிர்வாகி மீது கார் ஏற்றி கொலை செய்த பாஜகவை சேர்ந்த ஊராட்சி முன்னாள் தலைவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்ச நல்லூரைச் சேர்ந்தவர் நல்ல கண்ணு ( 50 ). இவருக்கு சுப்பிரமணிய புரத்தில் சொந்தமாக வாழைத் தோட்டம் உள்ளது. ஓபிஎஸ் அணியின் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலாளராக செயல்பட்டு வந்தார். நல்லகண்ணு நேற்று காலை வாழைத் தோட்டத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் - சுப்பிரமணியபுரம் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது கார் ஒன்று மோதியது. இதில் அவர் உயிரிழந்தார். ஸ்ரீவைகுண்டம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
நல்லகண்ணுவுக்கும், அதே ஊரைச் சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று காலை இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் காரை வேகமாக ஓட்டி வந்து நல்லகண்ணு மீது அவர் மோதியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் சங்கர் கணேஷ் ( 45 ) சரணடைந்தார். சங்கர் கணேஷ் ஆதிச்ச நல்லூரில் ஊராட்சி தலை வராக இருந்தவர். கடந்த வாரம் பாஜகவில் இணைந்தார். தற்போது இவரது மனைவி ஊராட்சி தலைவராக உள்ளார்.
