

சென்னை: அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவு பறந்து வந்து விழுந்த ட்ரோனால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணாநகர் போகன் வில்லா பூங்கா எதிரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்துக்குள் நள்ளிரவு 12.30 மணியளவில் எங்கிருந்தோ பறந்து வந்த ட்ரோன் ஒன்று விழுந்தது. இதைக் கண்டு அக்குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அந்த ட்ரோன் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அண்ணாநகர் போலீஸார் சம்பவ இடம் விரைந்து விசாரித்தனர்.
விசாரணையில் பக்கத்து குடியிருப்பில் வசிக்கும் ஒருவர், ஆன்லைன் வாயிலாக ட்ரோனை வாங்கியதாகவும், சொந்த ஊர் சென்று அங்கு வைத்து விளையாடுவதற்காக இதைப் பயன்படுத்த திட்டமிட்டதாகவும், தற்போது தனது வீட்டுக்கு வந்துள்ள உறவினர் ஒருவர் அதைத் தவறாக இயக்கியதால் ட்ரோன் பறந்து பக்கத்தில் உள்ள குடியிருப்பில் விழுந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸார் ட்ரோனை அவரிடம் ஒப்படைத்தனர். இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.