Last Updated : 16 Feb, 2024 06:27 AM

 

Published : 16 Feb 2024 06:27 AM
Last Updated : 16 Feb 2024 06:27 AM

ஆன்லைன் கடன் செயலி வலையில் சிக்குவோருக்கு ஆபாச படங்களை அனுப்புவதாக மிரட்டல்: அதிகரிக்கும் புகார்கள்

மதுரை: தற்போதைய டிஜிட்டல் உலகில், ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை எளிதாக நடக்கிறது. மேலும், கடன் பெறும் வசதியும் சுலபமாகிவிட்டது. அதேநேரத்தில், முகநூல் போன்ற செயலிகளில் பதிவிடப்படும் தனியார் கடன் செயலிகளால் அப்பாவிகளிடம் பணம் பறிப்பது அதிகரித்து வருகிறது.

சமீபகாலமாக வங்கியில் கடன் வாங்கி, முறையாக செலுத்த முடியாதவர்கள், வேறுவழியின்றி ஆன்லைனில் கடன் கிடைக்கிறதே என்ற ஆசையில், இணையத்தில் வரும் கடன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்கின்றனர். அதில் கேட்கப்படும் முகவரி, ஆதார் எண், வங்கி விவரம் உள்ளிட்ட தகவல்களை உள்ளீடு செய்தால், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் கடன் தொகையை அனுப்பி விடுகிறது. தவணை முறைகளில் கடன் தொகை வசூலிக்கப்படுகிறது.

உதாரணமாக, ரூ.10 ஆயிரம் கடன் தொகை என்றால், தலா ரூ.3,300 வீதம் 3 மாதங்களுக்கு கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனால், கடன் வாங்கியவர் தவணையை முறையாக செலுத்திய பிறகும், கடன் செலுத்தவில்லை என்று கூறி, மிரட்டுவதாகப் புகார்கள் எழுகின்றன.

மேலும், கூடுதல் தொகை கொடுக்க மறுப்புத் தெரிவித்தால், கடன் வாங்கியவரிடம் "உங்களது குடும்பத்தினர், உறவினர்களின் செல்போன் எண்களுக்கு, உங்களது ஆபாச, நிர்வாணப் படங்களை அனுப்புவோம்" என்று மிரட்டி, பணம் பறிக்கின்றனராம். இதற்கு பயந்த சிலர், வாங்கிய கடனுக்கு அதிகமாகவே பணம் செலுத்துகின்றனர். முடியாத பட்சத்தில், சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்கின்றனர்.

மதுரை தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர், இதேபோன்ற மோசடி கடன் செயலி நிறுவனத்திடம் சிக்கியுள்ளார். ரூ.25 ஆயிரம் கடன் வாங்கிய அவரிடம், ரூ.70 ஆயிரம் வரை பறித்துள்ளனர். இதுகுறித்து அவர் சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் கூறும்போது, "முகநூலில் லோன் செயலியைப் பார்த்து ரூ.25 ஆயிரம் கடன் பெற்றேன். முறையாக தவணையை செலுத்தி, கடனை அடைத்த பிறகும், கடனைக் கட்டவில்லை என்றுகூறி மிரட்டினர். பின்னர் எனது செல்போனுக்கு வேறுஒரு பெண்ணுடன் சம்பந்தப்படுத்தி, ஆபாசமார்பிங் படங்களை அனுப்பினர். தொடர்ந்து எனது குடும்பத்தினர், உறவினர்களின் செல்போன் எண்களுக்கும் அனுப்புவோம் என்று மிரட்டுகின்றனர்" என்றார்.

விழிப்புணர்வு அவசியம்: சைபர் கிரைம் போலீஸார் கூறும்போது, "தேசிய வங்கிகளில் அதிக கெடுபிடி இருப்பதால், சிலர் இதுபோன்ற கடன் செயலிகளிடம் சிக்கி ஏமாறுகின்றனர். இந்தப் புகார்களில் ஏமாற்றிய நபர்களின் முகவரியைக் கண்டறிவதில் சிக்கல் உள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x