

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூரில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று முன்தினம் வேலைவாய்ப்பு முகாமுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
அப்போது அங்கு வந்த ஒரு மாணவரை, முகாம் ஒருங்கிணைப்பாளரும், கல்லூரிப் பேராசிரியருமான முகிலன், இருக்கையில் அமருமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த மாணவர் கோபத்துடன் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
அன்று மாலை கல்லூரியில் இருந்து வெளியே வந்த பேராசிரியர் முகிலனுடன், மதுபோதையில் இருந்த அந்த மாணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பேராசிரியர் முகிலன், அந்த மாணவரின் கல்லூரி அடையாள அட்டையை வாங்கிவைத்துக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், அன்று இரவு தனதுசக நண்பர்கள் 3 பேருடன் வந்து கல்லூரிநுழைவுவாயில் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.தகவலறிந்த ஜம்புநாதபுரம் போலீஸார் அங்கு சென்று, ஆய்வு மேற்கொண்டனர்.
இது தொடர்பாக கல்லூரி முதல்வர் பொன்.பெரியசாமி அளித்த புகாரின்பேரில், மாணவர்கள் பவித்ரன்(22), கபிலன்(21), பிரதீஸ்(22), ஜீவா(21) ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர்.