Published : 16 Feb 2024 06:20 AM
Last Updated : 16 Feb 2024 06:20 AM
சென்னை: சென்னையில் போதைப் பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் அதே பகுதியில் உள்ள டவர் பார்க் அருகில் உள்ள ஐயப்பன் கோயில் அருகே கண்காணித்தனர். அப்போது, அந்த பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐ.டி. பணியாளர்கள் உட்படப் பலர் சந்தேகத்துக்கிடமான முறையில் வந்து செல்வது தெரிந்தது.
இதையடுத்து அங்கு விரைந்து கண்காணித்தபோது கஞ்சா மற்றும் உடல் வலி நிவாரணத்துக்காக பயன்படுத்தும் மாத்திரைகளை போதை மாத்திரையாக விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இது தொடர்பாக அண்ணாநகர் அமீத்பர்கி (23), ராஜீப் சர்கார்(22), பிபேக்ராய் (20), அமைந்தகரை முகமது அமன் (23),நெற்குன்றம் மங்கள்குருன் (31) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 270 கிராம் எடைகொண்ட கஞ்சா, 1514 உடல்வலிநிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் கைதான அமீத்பர்கி மற்றும் ராஜீப்சர்கார் ஆகியோர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் மீதம் உள்ள 3 பேரும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்களது பின்னணியில் இருப்பவர்கள் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT