Published : 16 Feb 2024 04:06 AM
Last Updated : 16 Feb 2024 04:06 AM
புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர்கள் முத்துபாண்டி- விஜயலட்சுமி. இவர்கள் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் பலூன் பொம்மை விற்று வருகின்றனர்.
காலையில் வரும் இவர்கள், இரவு வரை கடற்கரைச் சாலையில் பொம்மைகளை விற்பார்கள். அவர்களின் மூன்றரை வயது குழந்தை சனல்யா, அங்கு அவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும். நேற்று முன்தினம் இரவு 8 மணியளில் கடற்கரைச் சாலையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது குழந்தையை காணாமல் திடுக்கிட்டனர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதையடுத்து பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
எஸ்எஸ்பி நாரா சைதன்யா, குழந்தையை மீட்க சிறப்பு அதிரடிப்படைக்கு உத்தரவிட்டார். குழந்தையை மீட்க தடயமாக, அதன் புகைப்படம் மட்டுமே இருந்தது. இதையடுத்து, அதிரடிப்படை இன்ஸ் பெக்டர் கணேஷ் மற்றும் போலீஸார் கடற்கரைச் சாலையில் நேரு சிலை அருகேயுள்ள பாண்லே பால் பூத் சிசிடிவி கேமராவைச் சோதனையிட்டனர். அதில்,இரு இளைஞர்கள் குழந்தையை அழைத்து செல்வது தெரிந்தது. இதைத் தொடர்ந்து நேற்று புதுச்சேரி நகரப்பகுதி முழுவதும் உள்ள 400 சிசிடிவி கேமராக்களில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு கேமராவில், காந்தி வீதி அமுத சுரபி அருகே ஆட்டோவில் குழந்தையை ஏற்றி போவது கண்டறியப்பட்டது. குழந்தையை அழைத்து செல்வோரின் புகைப் படம் கிடைக்க, அதைக் கொண்டு, குழந்தையை அழைத்து சென்ற நபர் கணுவாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பது தெரிந்தது. உடனடியாக கணுவாபேட்டைக்குச் சென்று போலீஸார் ஆகாஷை விசாரித்தனர்.
அவர் கூறுகையில், "காரைக்காலைச் சேர்ந்த மும்தாஜீக்கு குழந்தை இல்லை. அவருக்காக குழந்தையை கொண்டு வந்து தந்தால் ரூ. 1 லட்சம் தருவதாக காரைக்காலைச் சேர்ந்த நந்தகுமார் தெரிவித்தார். உடனே எனது நண்பர் மூர்த்தியுடன் சேர்ந்து கடற்கரைப் பகுதியில் திரிந்த போது, இந்த மூன்றரை வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அக்குழந்தையை கடத்தி வந்தோம். குழந்தையை காரைக்காலில் மும்தாஜிடம் ஒப்படைக்க மூர்த்தி சென்றுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காரைக்கால் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட, நேற்றிரவு குழந்தையை போலீஸார் மீட்டனர். மேலும் கடத்திச் சென்றவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட தகவலை வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பெற்றோருக்கு தெரிவித்தனர். தொடர்ந்து குழந்தையை அழைத்து வர நேற்றிரவே புதுச்சேரி பெரியகடை போலீஸார் மற்றும் சிறப்பு அதிரடி படை போலீஸார் காரைக்கால் விரைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT