

சென்னை: சென்னை கொடுங்கையூர், எம்.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (24). மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். இவரது கல்லூரி நண்பரான பிரவீன் குமார், வீடு வாங்க அவசரமாக ரூ.10 லட்சம் பணத்தை கடனாக கேட்டுள்ளார். எனவே, அவர் தன்னிடமிருந்த ரூ.5 லட்சம் மற்றொரு நண்பரான ஜெயமுருகன் என்பவரிடம் ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சத்தை கடந்த ஜனவரி 5-ம் தேதி பிரவீன் குமாரிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் பணத்தை திருப்பித் தந்துவிடுவதாக கூறி பணத்தை பெற்றுக் கொள்ள பட்டாளம் வரும்படி பிரவீன் குமார் நேற்று முன்தினம் அழைத்துள்ளார். தன்னால் வர இயலாத சூழல் இருந்ததால் தனது மைத்துனரான கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த மற்றொரு மணிகண்டனை (21) அனுப்பி வைத்துள்ளார்.
கூடவே அவரது மற்றொரு நண்பர் ஒருவரும் உடன் சென்று ரூ.10 லட்சத்தை பிரவீன் குமாரிடம் பெற்றுக் கொண்டு பட்டாளத்தில் இருந்து பேசின்பாலத்தை தாண்டி எம்.ஆர்.நகர் வரும் வழியில் எருக்கஞ்சேரி மேம்பாலம் அருகே, 4 இளைஞர்கள் வழிமறித்தனர். அவர்கள் தங்களை போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டதோடு அவர்களது வாகனங்களில் போலீஸ் எனவும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
மேலும், 4 பேரும் பணத்தைக் கொண்டுவந்த மணிகண்டனிடம் சென்று, `உங்கள் மீது சந்தேகம் உள்ளது. எனவே,வாகனத்தை சோதிக்க வேண்டும்' எனக்கூறி சோதனை செய்தபோது இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சத்தை எடுத்துக் கொண்டு அது குறித்து விசாரித்தனர். நடந்த நிகழ்வுகளை கூறிய பின்னரும், அவர்கள் நம்பாமல் `வியாசர்பாடி காவல் நிலையம் வந்து எழுதி கொடுத்துவிட்டு பணத்தை திரும்ப பெற்றுச் செல்லுங்கள்' எனக் கூறிவிட்டு, அங்கிருந்து சென்றனர்.
இதையடுத்து மணிகண்டன் வியாசர்பாடி காவல் நிலையம் சென்ற பிறகுதான், வந்தவர்கள் போலீஸ் அல்ல வழிப்பறி கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து அதே காவல் நிலையத்தில் புகார்அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்துதப்பியவர்களை தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க பணத்தை கொடுத்து அனுப்பியபிரவீன் குமார் மீது போலீஸாருக்குசந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை பிடித்தும் விசாரித்து வருகின்றனர்.