

சென்னை: தமிழ்நாடு வக்ஃபு வாரிய அலுவலகத்தில், உளவுப் பிரிவு காவலர் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய லீக் கட்சி (தமிழ்நாடு) மாநில தலைவர் தடா ஜெ.அப்துல் ரஹீம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறத்தில், தமிழ்நாடு வக்ஃபு வாரியதலைமை அலுவலகம் உள்ளது.நேற்று முன்தினம் (13-ம் தேதி)இந்த அலுவலகத்துக்கு விசாரணைக்கு சென்றிருந்த உளவுப்பிரிவு (நுண்ணறிவு) காவலர் மாரிமுத்துவை வக்ஃபு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் தாக்கியதாக தகவல் பரவி வருகிறது.
சட்ட நடவடிக்கை: காவல் பணியில் இருந்த காவலரை வக்ஃபு வாரிய தலைவர் பொறுப்பில் உள்ள ஒருவர் தாக்கிவிட்டதாக வரும் தகவல்கள் வேதனை அளிக்கிறது. ஆகையால் வக்ஃபு வாரிய அலுவலகத்தில் இருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் மாநில பொதுச் செயலாளர் அக்பர் பாஷாவும் காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.