

சென்னை: சென்னை பட்டரவாக்கம் ரயில்நிலையத்தில் இரண்டு கல்லூரிமாணவர்கள் இடையே நடந்த மோதல் தொடர்பாக 3 மாணவர்களை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். இதுதவிர, 10 மாணவர்களைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பயணிகளுக்குஇடையூறாக மோதலில் ஈடுபட்ட 60 மாணவர்களை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று இரண்டு கல்லூரி நிர்வாகத்துக்கும் ரயில்வே போலீஸார் பரிந்துரை செய்துள் ளனர்.
கற்கள், பாட்டில்களால் தாக்குதல்: சென்னை கடற்கரை ரயில்நிலையத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி மின்சார ரயில் ஒன்று நேற்று முன்தினம் பிற்பகல் புறப்பட்டது. இந்த ரயிலில்மாநில கல்லூரி மாணவர்கள் பயணம் மேற்கொண்டனர். இந்த ரயில் பட்டரவாக்கம் ரயில் நிலையத்தை அடைந்தபோது, அங்கு ஏற்கெனவே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர். இரு தரப்பினரும் கற்கள், பாட்டில்களை பரஸ்பரம் வீசிசரமாரியாக தாக்கிக் கொண் டனர்.
இதனை பார்த்த பயணிகள் அச்சமடைந்து அலறி அடித்து ஓடினர். தகவல் அறிந்து ரயில்வேபோலீஸாரும், ஆர்.பி.எஃப் போலீஸாரும் அங்கு விரைந்து வந்தனர். போலீஸாரை கண்டதும் மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இவர்களில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரண்ராஜ்(18), மதன்ராஜ்(18), திவ்யதர்ஷன்(19) ஆகிய 3 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
10 மாணவர்கள் அடையாளம்: மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்களை ரயில்வே போலீஸார் அடையாளம் கண்டு உள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.இதற்கிடையே, மோதலில் ஈடுபட்ட 60 மாணவர்களை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கவேண்டும் எனக் கூறி இரண்டுகல்லூரி நிர்வாகத்துக்கும் ரயில்வே போலீஸார் பரிந்துரைசெய்துள்ளனர். மேலும், மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் முகவரியை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண் டுள்ளனர்.
இது குறித்து தமிழக ரயில்வே டிஎஸ்பி ரமேஷ் கூறியதாவது: தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ரயில்வே சொத்துகளை சேதப்படுத்தியது, பயணிகளுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து உள்ளோம். 3 பேரை கைது செய்து உள்ளோம்.
10 பேர் அடையாளம் கண்டு, தேடி வருகிறோம். 50 பேர் அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது. கல்லூரி மாணவர்கள் இடையே மோதலில் பயணிகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த மாணவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஒழுங்கீனமாக செயல்படும் இந்த மாணவர்களை இந்த கல்லூரிகளில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளோம். மேலும், இந்த மாணவர்களின் முகவரியை வழங்க கேட்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தொடரும் மோதல் போக்கு: பச்சையப்பன் கல்லூரி மற்றும்மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக தகராறு, மோதல்கள் இருந்து வருகின்றன. கல்லூரி மாணவர்கள் இடையே மோதலை தவிர்க்க, ரயில்வே போலீஸார் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு சென்று அவ்வப்போது விழிப்புணர்வு ஏற் படுத்தி வருகின்றனர்.